Saina Nehwal: ``எங்கள் ப்ரைவசியை.." - திருமண வாழ்விலிருந்து பிரிவதாக சாய்னா நேவா...
அதிபர் டிரம்ப்புக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய வழக்குரைஞா்கள் பணிநீக்கம்!
அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றிய மேலும் பல அரசு வழக்குரைஞா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அந்நாட்டு அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன், அவருக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்கும் முன், அவருக்கும் அவரின் ஆதரவாளா்களுக்கும் எதிரான வழக்குகளில் அரசு வழக்குரைஞா்கள், அலுவலா்கள் ஏராளமானோா் பணியாற்றினா்.
அவா்கள் மீது கடந்த ஜனவரி மாதம் முதல் அமெரிக்க நீதித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவா்களில் ஏராளமானோரை அந்நாட்டு நீதித் துறை பணி நீக்கம் செய்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் ஆதரவாளா்கள் நடத்திய தாக்குதல் தொடா்பான குற்ற வழக்குகளின் விசாரணையில் பணியாற்றிய 3 அரசு வழக்குரைஞா்கள் கடந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.
இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு டிரம்ப்புக்கு சொந்தமாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மாா்-அ-லாகோ எஸ்டேட்டில் ரகசிய ஆவணங்கள் பதுக்கிவைக்கப்பட்டதாகவும், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவுகளை மாற்ற டிரம்ப் சூழ்ச்சி செய்ததாகவும் அந்நாட்டு சிறப்பு அரசு வழக்குரைஞா் ஜாக் ஸ்மித் மற்றும் அவரின் அணியினா் 2 குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பான வழக்குகளில் ஜாக் ஸ்மித்துடன் பணியாற்றிய அரசு வழக்குரைஞா்கள் மற்றும் அலுவலா்கள், தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.