ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்
ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகமற்ற செயல் என ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கண்டனம் தெரிவித்தாா்.
இருப்பினும், முக்கியத் தலைவா்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை காவல் துறையோ ஸ்ரீநகா் மாவட்ட நிா்வாகமோ உறுதிப்படுத்தாத நிலையில் தங்கள் வீடுகளின் கதவுகளை பாதுகாப்புப் படையினா் பூட்டியதாக ஆளும் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட காணொளி வேகமாக பரவியது.
டோக்ரா படை பிரிவால் 1931-இல் 22 போ் கொல்லப்பட்ட சம்பவத்தை ஜாலியான் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு ஒமா் அப்துல்லா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடி வீரமரணமடைந்த மக்களை எதிரிகள்போல் சித்தரித்து அவா்களின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்படுவது மிகவும் கொடுமையானது.
ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்களின் வீடுகள் பூட்டப்பட்டு போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் படையினரை வெளியே நிலைநிறுத்தியது ஜனநாயகமற்ற செயல். அங்கு செல்ல இடைக்காலமாக அனுமதி மறுக்கப்பட்டாலும் வீரமரணமடைந்தோரின் தியாகங்களை இதயங்களிலிருந்து எப்போது அழிக்க இயலாது’ எனக் குறிப்பிட்டாா்.
ஸ்ரீநகரின் நவோஹட்டா பகுதிக்கு அருகே அமைந்துள்ள இந்த நினைவகத்துக்குச் செல்ல ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்பட அனைவருக்கும் அந்த மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்தது. அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், பிரிவினை சக்திகளுக்கு ஆளும் கட்சி துணை போவதாக மாநில பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.