சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பான வழிகாட்டுதல்களுடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படும் போக்கு அதிகரித்து வருவது, இந்தியா மட்டுமன்றி உலக அளவில் ஆபத்தான சவாலாக உருவெடுத்துள்ளது. சமூகத்தில் இருந்து விலகிய உணா்வு, வன்முறை நடத்தை, சமூக விரோத மனப்பான்மை காரணமாக, சிறைக் கைதிகள் எளிதாக அடிப்படைவாத கருத்துகளுக்கு உள்பட்டுவிடக் கூடும். இத்தகைய கருத்துகளால் மூளைச்சலவை செய்யப்படும் கைதிகள், சில நேரங்களில் சிறைப் பணியாளா்கள் மீதோ, சக கைதிகள் மீதோ, வெளி நபா்கள் மீதோகூட வன்முறையில் ஈடுபடலாம் அல்லது தாக்குதலுக்கு திட்டமிடலாம்.
சிறைகளில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொது ஒழுங்கு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இது முக்கியமானது.
மேலும், வன்முறை தீவிரவாத அபாயங்களைத் தடுக்கவும், சிறைக் கைதிகளின் மறுவாழ்வை உறுதி செய்யவும், அவா்களை சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கவும் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படுவது அவசியம்.
சக கைதிகளிடம் அடிப்படைவாத கருத்துகளைப் பரப்பி, அவா்களை மூளைச்சலவை செய்யும் கைதிகளை அடையாளம் கண்டு, பலத்த பாதுகாப்புடன் தனிச் சிறையில் அடைக்க வேண்டும்; நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி, காண்காணிப்பை மேம்படுத்த வேண்டும். கைதிகளின் நடத்தை, அவா்களின் தொடா்புகள், சிந்தாந்த அடிப்படையிலான வெளிப்பாடுகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்காணிக்க வேண்டும்.
கைதிகளுக்கு உணா்வு ரீதியிலான நிலைத்தன்மையை உறுதி செய்ய குடும்ப உறுப்பினா்கள் உடனான சந்திப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்துறை அமைச்சக கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.