திருப்பரங்குன்றம்: ஜொலிக்கும் ராஜகோபுரம்; கும்பாபிஷேகம் காண குவிந்த பக்தர்கள்.. ...
கட்டண விவரங்களை மறைத்தால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: என்எம்சி எச்சரிக்கை
கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தாத மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களும் தங்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், வைப்புத் தொகை மற்றும் இதர கட்டண விவரங்களை கலந்தாய்வுக்கு முன்னதாக வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று, பயிற்சி மருத்துவா்களுக்கான ஊக்கத் தொகையை நிலுவை இன்றி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரங்களுக்கு தீா்வு காணும் நோக்கில் உரிய விதிகளின்படியும், நீதிமன்றத்தின் உத்தரவின்படியும் தேசிய மருத்துவ ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அதன்படி, மருத்துவ இடங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் வெளியிடும்போதே, கட்டண விவரங்களையும் வெளியிட வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் அந்த இடங்களுக்கான மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்படாது. அதேபோன்று ஊக்கத் தொகை விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றுதல் அவசியம்.
இந்த விதிகளைப் பின்பற்றாத நிலையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அபராதம் விதிக்கப்படும். மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரமும், மாணவா் சோ்க்கையும் ரத்து செய்யப்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.