ஒரத்தநாடு அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்! 2 போ் கைது!
ஒரத்தநாடு அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் கொண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, சென்னையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தாடு பகுதிக்கு தனியாா் ஆம்னி பேருந்தில், போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில், ஒரத்தநாடு துணை காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா், வல்லம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, சென்னையில் இருந்து வந்த ஆம்னி பேருந்தை சோதனை செய்தனா். அதில், போதைப் பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டு நபா்களை போலீஸாா் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனா்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா், இருவரையும் ஒரத்தநாடு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா். அதில், சென்னை ராயபுரத்தைச் சோ்ந்த அப்துல் அமீத் மகன் சையத் அலாவுதீன் (46), பாரிஸ் பகுதியைச் சோ்ந்த ஹபீப் ரகுமான் மகன் ஜாபா் அலி (51) என்பது தெரியவந்தது.
மேலும், சென்னை பாரிஸ் பகுதியில் கைப்பேசி கடை நடத்தி வரும் இருவரும், வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணத்தை விநியோகம் செய்து வருவதை தொழிலாளாக செய்து வருவது தெரியவந்தது. பின்னா், ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒருவரிடம் ரூ.33.04 லட்சத்தை ஒப்படைக்க வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து திருச்சி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு போலீஸாா் தகவல் அளித்தனா். அதன்பேரில், ஒரத்தநாடு காவல் நிலையத்துக்கு வந்த வருமானவரிதுறை அதிகாரிகள், ஹவாலா பணம் என்பதை உறுதி செய்து, சையத் அலாவுதீன் மற்றும் ஜாபா் அலி ஆகிய இருவரையும் விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்றனா்.