மகளை கொலை செய்த தந்தை: "மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்" - தி கிரேட் காளி சொல்வதென்ன?
தி கிரேட் காளி என அறியப்படும் தலீப் சிங் ராணா முன்னாள் குத்துச் சண்டை நட்சத்திரமும் பாஜக பிரமுகருமாவார். சமீபத்தில் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ் என்ற பெண் அவரது சொந்த தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த அதிர்ச்சியையும் தனது கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று (13.07.2025) ஃபிட் இந்தியா சன்டேஸ் ஆன் சைக்கில்ஸ் (fit india sundays on cycles) என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், "இந்தியர்கள் ஃபிட்டாக இருப்பது நம் பிரதமரின் கனவு. அப்படியிருந்தால்தான் நம் நாடு விஷ்வ குருவாக இருக்க முடியும். எல்லோரும் குறைந்தது தினசரி ஒரு மணிநேரம் ஆரோக்கியத்துக்கு செலவு செய்ய வேண்டும்." எனப் பேசினார்.
"மகள்கள் மகன்களுக்கு சளைத்தவர்கள் இல்லை" - கிரேட் காளி
ராதிகா யாதவ் கொலை சம்பவம் குறித்து, "ஒரு மனிதர் அவரின் சொந்த மகளையே கொலை செய்வது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். நம் மகள்களைக் கொலை செய்தால் எப்படி, 'பேட்டி பச்சோவ், பேட்டி பதோவ் (பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம், கல்வி வழங்குவோம்)' என்ற நோக்கத்தோடு செயல்பட முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
#WATCH | Delhi: On the Radhika Yadav Murder case, wrestler & BJP leader Dalip Singh Rana aka 'The Great Khali', says, "This is an unfortunate incident that a man killed his own daughter. How will we work towards our motto of 'beti abchao beti padhao' if we go on killing our… pic.twitter.com/eejn8LzVuU
— ANI (@ANI) July 13, 2025
மேலும் அவர், "நம் மகள்களுக்கு ஆதரவளிக்காமல் நாம் விஷ்வகுரு என்ற நிலையை அடைய முடியாது. எனக்கு மகள் இருக்கிறார், மகள்கள் மகன்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை. இது மக்களின் மனநிலையைப் பொறுத்தது... சிலர் தங்களது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லோரும் தங்கள் மகள்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்கள் ஸ்போர்ட்ஸில் ஜொலிக்க ஊக்கமளிக்க வேண்டும்" எனப் பேசினார் காளி.
ராதிகா யாதவ் கொலை:
ஹரியானாவில் உள்ள குருகிராம் நகரில் ராதிகா யாதவ் என்ற 25 வயது பெண் டென்னிஸ் அகாடமி நடத்தி வந்துள்ளார். அதனை மூட வேண்டும் என அவரது தந்தை தொடர்ந்து அறிவுறுத்தியிருக்கிறார். இத்துடன் தந்தைக்கும் மகளுக்கும் வேறு சில கருத்து வேறுபாடுகளும் இருந்துள்ளன.
ராதிகா யாதவ் சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவில் தோன்றியுள்ளார். அதை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது தந்தை அந்த வீடியோவை டெலிட் செய்யுமாறும் வற்புறுத்தியுள்ளார்.
இதற்கிடையில்தான் கடந்த ஜூலை 10ம் தேதி ராதிகா யாதவின் தந்தை தீபக் யாதவ் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்ததாகக் கூறப்படுகிறது.