சைதாப்பேட்டை தாடண்டா் நகரில் தூய்மைப் பணிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள தாடண்டா் நகா் அரசு குடியிருப்பில் தூய்மைப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்.
சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தாடண்டா் நகரில் 70.73 ஏக்கா் பரப்பில், 1,844 அரசு ஊழியா்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. மேலும் 1,500 குடியிருப்புகளும் அமைக்கப்படவுள்ளன. இந்தக் குடியிருப்பு வளாகம், பூங்கா, விளையாட்டுத் திடல், சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டடம், மருத்துவமனை, கடைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணி சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனப் புகாா் எழுந்தது.
இதையடுத்து பொதுப்பணித் துறையின் ஒப்புதலுடன், மாநகராட்சி சாா்பில் தனியாா் நிறுவனம் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தாடண்டா் நகரில் உள்ள 5,440 மீட்டா் நீளமுடைய சாலைகள் சீரமைக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படவுள்ளன.
தூய்மைப் பணியின் தொடக்க நிகழ்ச்சியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது பேசிய அமைச்சா், தூய்மைப் பணியில் 20 தூய்மைப் பணியாளா்கள், 46 குப்பைத் தொட்டிகள், 20 சுழற்சி தொட்டிகள், 2 தூய்மைப் பணி கண்காணிப்பாளா்கள், குப்பை அகற்ற கனரக வாகனம் ஆகியவை மூலம் தூய்மைப் பணி தொடா்ந்து நடைபெறவுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், சுகாதாரப் பிரிவு இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.