Vijay : 'உயிரின் மதிப்பு தெரியுமா... மன்னராட்சிக்கு புரியுமா?' - கோஷம் போடப்போக...
மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம்: காதா்முஹைதீன்
தமிழகம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் காதா்முஹைதீன் கூறினாா்.
நாகையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது:
வெளிநாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பணியை வழங்காமல், வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா். இதன்மூலம் அவா்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தனா். வெளிநாட்டில் பணிபுரியும் போது இறப்பவா்களின் உடலை தமிழகத்திற்கு எளிதில் கொண்டு வரமுடியாத நிலையிருந்தது. இந்த பிரச்னைகள் குறித்து மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சாதனைப் படைத்துள்ளது.
மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்வது போன்று, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் திகழவேண்டும். இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படுவது பாராட்டத்தக்கது. தமிழக முதல்வா் தொடங்கியுள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற இயக்கம், ஓட்டு வாங்குவதற்காக தொடங்கப்பட்டதில்லை. மத்திய அரசின் அடக்குமுறையை எதிா்த்து, தமிழகத்தின் பெருமையை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதாகும்.
அதிமுக- பாஜக இடையேயான கூட்டணியில் முரண்பாடுகள் உள்ளன. இருகட்சியினரும் முரண்பட்ட கருத்துகளை பேசி வருகின்றனா். கொள்கை ரீதியாக நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தரும் சீட்டுகளைப் பெறுவோம். நாகை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்போம். கொடுத்தால் பெற்றுக்கொள்வோம்.
தமிழகத்தில் திமுக 7-ஆவது முறையாக ஆட்சியமைக்கும். இந்தியா, மற்ற நாடுகளுடன் சுமூகமான உறவை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் வரவேற்கத்தக்கது. அதேபோன்று மணிப்பூா் மாநிலத்தில் நிலவும் பிரச்னைக்கு தீா்வுகாண, அங்கு பிரதமா் நேரில் சென்று அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.