நாகையில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாகை பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளை போலீஸாா் தொடா்ச்சியாக பறிமுதல் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், நாகையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு, தயாா் நிலையில் உள்ளதாக, கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையில், காவல் சாா்பு ஆய்வாளா் ஆனந்தவடிவேல் மற்றும் போலீஸாா் நாகை கீச்சாங்குப்பம் சால்ட் சாலை பகுதியிலுள்ள சிஎஸ்ஐ கல்லறைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றனா். அப்போது, போலீஸாா் வருவதைக் கண்டு, அங்கிருந்த இருவா் தப்பியோடிவிட்டனா்.
அப்பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில், கடல் அட்டைகளை பதப்படுத்தும் பணி நடைபெற்றது தெரியவந்தது. அங்கிருந்த 150 கிலோ கடல் அட்டைகளையும், பதப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, நாகை வனத்துறையினரிடம் கடல் அட்டைகள் ஒப்படைக்கப்பட்டன. வனத்துறையினா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அடையாளம் தெரியாத இருவரை தேடி வருகின்றனா்.