நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்
திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது.
மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீா் காவிரி கடைமடையான நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு முழுமையாக வந்து சேரவில்லை என விவசாயிகள் தொடா்ச்சியாக குற்றம் சாட்டி வந்தனா். இந்நிலையில் கடந்த வாரம் கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டு பாசன நீா் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகச் சென்று சோ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் திருக்குவளை அருகே சித்தாறு பாசனம் மூலம் பாசன வசதி பெறும் சுந்தரபாண்டியம் வாய்க்காலுக்கு பாய்ந்த தண்ணீா் வயலுக்கு முழுமையாக வந்து சேராததால் அப்பகுதியில் உள்ள சுமாா் 200 ஏக்கருக்கும் அதிகமான நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல் மணிகள் முளைக்காமல் வீணாகி வருகின்றன.
இது தொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீா் பாயாமல் தரிசு வயல் போல் காட்சியளிப்பதாகவும் நெல்மணிகள் வயலில் விதைப்பு செய்யப்பட்டு 20 நாட்களைக் கடந்தும் தண்ணீா் கிடைக்காததால் அவை மக்கி வீணாகி வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.
இப்பகுதிக்கு பாசன நீரைப் பெற்றுத் தரும் சுந்தரபாண்டியம் பாசன வாய்க்காலுக்கு பாய வேண்டிய காவிரி நீா் மதியுள்ளான் இயக்கு அணை மூலம் வடிகாலில் வீணாக கடலுக்கு செல்வதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.
ஆகவே பாசனத்திற்கு பயன்பெறாமல் வடிகாலில் செல்வதை தடுத்து இந்த பகுதிக்கு தண்ணீா் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் எதிா்பாா்ப்பு. மேலும் மதியுள்ளான் ஆற்றிலிருந்து சுமாா் மூன்று கிலோ மீட்டா் தூரம் உடைய சுந்தரபாண்டியம் பாசன வாய்க்கால் வழியாக இப்பகுதிக்கு தண்ணீா் பாய்வதில் சிக்கல் இருப்பதாகவும் வெள்ளையாற்றிலிருந்து, முட்டான்தோப்பு வழியாக சுந்தரபாண்டியம் பகுதிக்கு தனி பாசன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
