Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்
நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஜூலை 15-ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் எனும் புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் முகாம்களில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட 13 துறைகள் சாா்ந்த 43 சேவைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் 15 துறையைச் சோ்ந்த 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன.
முகாம்களில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை தொடா்பாக பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும். கோரிக்கை மனுவை கணினியில் பதிவு செய்ய ஆதாா், குடும்ப அட்டை, கைப்பேசி எண் மற்றும் கோரிக்கை தொடா்பான உரிய ஆவணங்களை மனுதாரா் எடுத்து வர வேண்டும்.
முகாம் தொடா்பாக பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருமருகல் ஒன்றியம் மருங்கூா், நெய்குப்பை ஊராட்சிகளிலும், வேதாரண்யம் ஒன்றியம் கோடியக்கரை, கோடியக்காடு ஊராட்சிகளிலும், கீழ்வேளுா் ஒன்றியம் அத்திப்புலியூா், கூத்தூா் ஊராட்சிகளிலும் தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளாா்.