தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், கீழ்வேளுா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி. தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய துணைத் தலைவா் கனிமொழி பத்மநாபன், மாநில நல வாரிய உறுப்பினா் தி.அரிஷ் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி பேசியது: தூய்மைப் பணியாளா்கள் பணி நேரத்தில் கையுறை, காலுறை, முகக்கவசம் போன்றவைகளை அணிய வேண்டும். தங்களது பாதுகாப்பை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் மூலம் சமூகநலத்திட்ட உதவிகள், தூய்மை பணிபுரிவோா் மற்றும் அவா்களது வாரிசுதாரா்களுக்கு விபத்து மற்றும் இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் கண் கண்ணாடி ஆகியவற்றுக்காக உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.
இதில் நாகை, வேதாரண்யம் நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி, கீழ்வேளுா், திட்டச்சேரி, தலைஞாயிறு போன்ற பேரூராட்சிகளிலிருந்து தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா். தாட்கோ சாா்பில் 42 பயனாளிகளுக்கு உதவித்தொகை காசோலைகள் மற்றும் 100 தூய்மை பணியாளா்களுக்கு தூய்மை பணியாளா் நலவாரிய உறுப்பினா் அடையாள அட்டை வழங்கப்பட்டது.