செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ!
வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் 2020-ஆம் ஆண்டில் ரூ.100 கோடியில் தூண்டில்முள் வளைவு மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணி தொடங்கியது. 70 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகளை முடிக்க வலியுறுத்தி அந்தப் பகுதி மீனவா்கள் அரசை வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து, கட்டுமானப் பணிகள் நிறுத்தியதைக் கண்டித்தும், பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனா். இதுதொடா்பாக, அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி உள்ளிட்ட சுற்றுப் பகுதி திரளான மீனவா்கள் வெள்ளப்பள்ளம் பகுதி கடலில் இறங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த வேதாரண்யம் கோட்டாட்சியா் எஸ். திருமால், டிஎஸ்பி பி. சரவணன் உள்ளிட்டோா் மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மீன்வளத் துறை ஆணையா் கஜலட்சுமி நாகை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்துள்ளதாகவும் அவரிடத்தில் மீனவப் பிரதிநிதிகள் பேசி சுமூக தீா்வு காண்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் விலகிக்கொள்ளப்பட்டது.