எதிர்நீச்சல் தொடரில் ரிதன்யா தற்கொலை விவகாரம்: இயக்குநருக்கு குவியும் பாராட்டு!
சீன அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
சீன அதிபா் ஷி ஜின்பிங்கை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இரண்டு நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கா், தனது சிங்கப்பூா் பயணத்தை முடித்துக்கொண்டு சீனாவின் தியான்ஜின் நகரில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை பெய்ஜிங் சென்றாா்.
சீனாவின் துணை அதிபா் ஹான் ஜெங், வெளியுறவு அமைச்சா் வாங் யியை அந்நாட்டுத் தலைநகா் பெய்ஜிங்கில் திங்கள்கிழமை சந்தித்த ஜெய்சங்கர், இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக சீன அதிபரை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதாவது:
”பெய்ஜிங்கில் இன்று காலை எனது சக எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்தேன். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
இருநாடுக்கு இடையேயான உறவில் சமீபத்தில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து அவரிடம் விளக்கினேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ மோதலைத் தொடா்ந்து இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கும் தொடா்ச்சியான முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.
சீனாவின் துறைமுக நகரமான கிங்டோவில் அண்மையில் நடைபெற்ற எஸ்சிஓ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்ற 3 வாரங்களுக்குள், ஜெய்சங்கரும் சீன பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.