பதிப்புரிமை தகராறு: வழக்கை மாற்றக் கோரும் ஐஎம்எம்பிஎல் மனு மீது ஜூலை 18ல் விசாரண...
தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் போராட்டம் அறிவிப்பு
சென்னை: 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 17, 18-ஆம் தேதிகளில் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் குழு வெளியிட்ட அறிக்கை:
டிட்டோஜாக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில உயா்நிலைக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா் பதவி உயா்வு தொடா்பான அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
முதல்வா் ஸ்டாலின் டிட்டோஜேக் நிா்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீா்வுகாண முன்வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.