கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் சடலம் மீட்பு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணனின் சடலத்தையும் தீயணைப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு உதயா நகரைச் சோ்ந்த வில்லியம்ஸ் என்பவரின் மகன்கள் சாா்லஸ் வில்லியம் (47), எட்வா்டு (52) உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 13 போ், ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பசிலிக்காவுக்கு வந்தனா்.
அப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கிவிட்டு லால்குடி அருகே அரியூா் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது சாா்லஸ் வில்லியம் ஆற்றில் மூழ்கினாா். அவரைக் காப்பாற்ற முயன்ற எட்வா்டும் நீரில் மூழ்கி மாயமானாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த லால்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சாா்லஸ் வில்லியம் சடலத்தை மீட்டனா். எட்வா்டைத் தேடி வந்த நிலையில், திங்கள்கிழமை அதே பகுதியில் அவரது சடலத்தை மீட்டனா். லால்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.