நெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ! சாலைகளைப் பயன்படுத்தத் தடை!
டிரம்ப்புடன் பேசியது என்ன? நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்க வேண்டும்! காங்கிரஸ்
இந்தியா - பாகிஸ்தான் மோதல் நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னதாக டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசிய மோடி, பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என கறாராக தெரிவித்ததாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதன்பிறகும் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், வருகின்ற மழைக்கால கூட்டத்தொடரில், இதுதொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் ஏஎன்ஐ செய்தியாளருடன் பேசியதாவது:
“அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒருமித்த கருத்து இருந்தால்தான் நாடாளுமன்றம் முறையாக செயல்படும். ஒருமித்த கருத்தை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. துரதிர்ஷ்டவசமாக, கடந்த 11 ஆண்டுகளாக மசோதாக்கள் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதமின்றி உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கேட்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
கடந்த 66 நாள்களில் 23 முறை, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தவும் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தவும் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக உள்ளன. டிரம்ப்புடன் தொலைபேசியில் மோடி என்ன பேசினார் என்பதை நாடாளுமன்றத்தில் அவர் விளக்க வேண்டும் என விரும்புகிறோம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பிரச்னையையும் எழுப்புவோம். வாக்காளர்களின் அரசியலமைப்பு உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. குடியுரிமையை நிரூபிப்பது தேர்தல் ஆணையத்தில் பொறுப்பு அல்ல. பேரவைத் தேர்தலுக்கு முன்பு நடத்தப்படுவது ஏன்? பிகாரில் அச்சமான சூழல் நிலவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.