இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
ஏர் இந்தியா விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ தனி அறக்கட்டளை: டாடா குழுமம்
ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ புதிதாக அறக்கட்டளை ஒன்றை நிறுவ டாடா குழுமம் ஆலோசித்து வருவதாக டாடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ‘ஏஐ-171’ விபத்துக்குள்ளானதில் 270-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயின. உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவியனைத்தையும் செய்வதாக ஏர் இந்தியா உரிமையாளரான டாடா குழுமம் வாக்குறுதியளித்திருக்கிறது.
இந்தநிலையில், விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கென தனியாக அறக்கட்டளை நிறுவ டாடா சன்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விமான விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ‘டாடா குடும்பத்தில்’ ஓர் அங்கமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், அந்த குடும்பங்களுக்கு நெடுங்காலம் தேவையான உதவியும் ஆதரவும் வழங்க வழிவகை செய்யப்படும்.
இந்த புதிய அறக்கட்டளையின் தலைவராக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவி வகிப்பார். இதற்கான ஆயத்த பணிகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் உடன் டாடாவின் பல்வேறு ட்ரஸ்ட்களும் இணைந்து இந்த அறக்கட்டளைக்கு தனி பட்ஜெட் ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக டாடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.