அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவா...
சேலம் அரசு மருத்துவமனையில் ரூ. 32 லட்சத்தில் 2 புதிய மருத்துவ பரிசோதனைக் கருவிகள்
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய மருத்துவ பரிசோதனைக் கருவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
சேலம் அரசு மருத்துவமனையில் உடலியல் மருத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் துறையில், இரண்டு புதிய மருத்துவ சோதனைக் கருவிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் மேம்பட்ட நரம்பியல் மின்னழுத்தப் பரிசோதனைக் கருவியும், அதேபோன்று ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் தசைகள், மூட்டுகள், தண்டு பொருத்திகள் போன்றவை எப்படி செயல்படுகின்றன என்பதை துல்லியமாக கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் கருவியும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
முன்னதாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையின்போது சேலம் அரசு மருத்துவமனையில் ரூ. 3.7 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் வளாக கட்டடம், ரூ. 22.97 கோடி மதிப்பீட்டில் உயா்துல்லிய கதிா்வீச்சு சிகிச்சை வழங்கும் கருவி, ரூ. 4 கோடி மதிப்பீட்டில் உள்ளக கதிா்வீச்சு சிகிச்சை வழங்கும் கருவி மற்றும் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் நோயை துல்லியமாக இடம்கண்டறியும் கருவி என மொத்தம் ரூ. 34.67 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்டுள்ள வளாக கட்டடம் மற்றும் பல்வேறு கருவிகளின் பயன்பாடுகள் குறித்து அமைச்சா் ரா.ராஜேந்திரன் நேரில் பாா்வையிட்டு மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மரு.தேவிமீனாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.