மெஸ்ஸியின் நம். 10 ஜெர்ஸிக்கு புதிய உரிமையாளர்..! பாட்டியுடன் வந்து ஒப்பந்தமிட்ட...
அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவால் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கடந்த மாதம் 27 ஆம் தேதி பதிவு செய்யப்படாத திருட்டுப் புகாரில் காவல்துறை தனிப்படையினரின் சட்டவிரோத விசாரணையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட 5 காவலர் கைது செய்யப்பட்டனர். மானாமதுரை டி.எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சிவகங்கை எஸ்.பி இடமாறுதல் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
ஏற்கெனவே அஜித்குமாரை காவலர்கள் தாக்கி சித்திரவதை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது, அஜித்குமார் குடும்பத்தினரிடம் அப்பகுதி அரசியல் புள்ளிகளும், காவல்துறையினரும் சமரசம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்குமார் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியில் தெரிந்த மறுநாள் (ஜூன் 28) உடலை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தினர்.
இந்த பதற்றமான சூழ்நிலையில் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சி புள்ளியும், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரமும் (இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்) இன்னும் சிலருடன் சேர்ந்து அஜித்குமாரின் தாயார் மாலதி, தம்பி நவீன்குமார், சித்தி, தாய்மாமா ஆகியோரை அப்பகுதியிலுள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்து சமரசம் பேசியுள்ளார்கள்.
"உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்கிறோம், இதை பெரிதுப்படுத்த வேண்டாம், லட்சக்கணக்கில் பணம் தருகிறோம், போராட்டம் நடத்த வேண்டாம்" என்று, அன்பாக மிரட்டி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
திருமண மண்டபத்தை பூட்டிக்கொண்டு ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதை தெரிந்துகொண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ஜன்னல் வழியாக மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். அதில் அரசியல் புள்ளிகள், காவல்துறையினர் இருப்பது நன்றாகத் தெரிகிறது. அப்போது மப்டியில் உள்ள ஒரு காவலர், ஜன்னலை சாத்திவிட்டு செல்கிறார். அதனால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த மண்டபத்தின் கதவை திறக்க சொல்லி ஆவேசமாக கதவை தட்டியுள்ளனர்.

ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலரும், காவல்துறை அதிகாரிகளும் அஜித்குமார் குடும்பத்தினரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக ஏற்கெனவே தகவல் பரவி வந்த நிலையில், தற்போது அதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமார் வழக்கில் தற்போது சிபிஐ விசாரணை தொடங்கியுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோவால் பஞ்சாயத்து செய்த ஆளும்கட்சி புள்ளிகள், அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்று சொல்லப்படுவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.