நூலிழையில் விபத்திலிருந்து தப்பிய இண்டிகோ விமானம்!
பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது நூலிழையில் விபத்திலிருந்து தப்பியுள்ளது.
நேற்றிரவு தில்லியில் இருந்து பாட்னாவின் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் (6E 2482) மொத்தம் 173 பயணிகளுடன் புறப்பட்டது. பாட்னா விமான நிலைய ஓடுபாதையில் நிர்ணயிக்கப்பட்ட தரையிறங்கும் ஓடுபாதை தளத்துக்கு முன்னரே விமானத்தை விமானி தரையிறக்கினார்.
விமானம் தரையிறங்கிய பின்னர், ஓடுபாதையின் நீளம் விமானத்தை நிறுத்த போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த விமானி, புத்திசாலித்தனமாக உடனடியாக விமானத்தை மேல் நோக்கி எழுப்பினார். மீண்டும் வானை நோக்கி பறந்த விமானம் இரண்டு முதல் மூன்று முறை வட்டமடித்து, சிறிது நேரம் கழித்துப் பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்கியது. இண்டிகோவில் இருந்த 173 பயணிகளும் நூலிழையில் உயிர்த்தப்பினர்.
விமானியின் சரியான யோசனையினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பட்னா விமான நிலைய ஓடுபாதை குறுகிய தூரத்தைக் கொண்டதாகும்.