காமராஜருக்கு ஏசி முக்கியம்! திருச்சி சிவா பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதில்!
முன்னாள் முதல்வர் காமராஜர் குளிர்சாதன வசதியில்லாமல் உறங்க மாட்டார் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், ``திருச்சி சிவா ஆதாரமில்லாமல் பேசுகிறார். காமராஜர் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதியில்லை’’ என்றும் குறிப்பிட்டார்.
சென்னை பெரம்பூரில் செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 15) திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டு பேசினார். இதன்போது, முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து கலைஞர் கருணாநிதி கூறியதாக சிலவற்றையும் திருச்சி சிவா பகிர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், ``மின் பற்றாக்குறை குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டனம் தெரிவித்திருந்தார். இருப்பினும், அவருக்கு குளிர்சாதன வசதி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதற்காக அவர் தங்கும் விடுதி உள்பட அனைத்து அரசு பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்த, தான் உத்தரவிட்டதாக கலைஞர் கருணாநிதி கூறினார்.
இதனிடையே, அவசரநிலை காலத்தில் காமராஜரை கைது செய்ய மத்திய அரசு முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில், திருப்பதி செல்வதற்காக காமராஜர் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், காமராஜர் திருப்பதி சென்றால், அவரை கைது நடவடிக்கையில் இருந்து தன்னால் காப்பாற்ற முடியாது என்று கூறியதாக கருணாநிதி கூறினார்.
இந்த நிலையில்தான், காமராஜரின் உயிர்பிரிகையில், கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு, நாட்டையும் ஜனநாயகத்தையும் அவரை (கருணாநிதி) காப்பாற்ற வேண்டும் என்று அவரிடம் கோரினார்’’ என்று தெரிவித்தார்.