அதிவேக சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை: இங்கிலாந்துக்கு 364 ரன்கள் இலக்கு!
Jurassic World Rebirth Review: அதே கதை, அதே டெம்ப்ளேட், அதே சாகசம் - இதுல டைனோசரே டயர்டாகிடும் பாஸ்!
பச்சை பசேலென உயர்ந்து நிற்கும் மரங்கள், அந்த உயரத்தைத் தாண்டி நிற்கும் ஓர் அழிந்து போன உருவம். மெதுவாக இலைகளைத் தின்று பூமி அதிர தன் இரு கால்களையும் தூக்கி நிற்க... "இது... இது ஒரு டைனோசர்!" என்று நாயகன் சாம் நீல் உச்சரிக்க, ஆச்சரியத்தில் நாயகி லாரா டேர்ன் வாயைப் பிளந்து பார்த்தார். அவர் மட்டுமல்ல உலகத்தையே `ஜுராசிக் பார்க்' படத்தின் மூலம் அப்படித்தான் வாயைப் பிளக்க வைத்தார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். கொட்டும் மழையில் தம்…தம்…தம்… என நிலம் அதிர, காருக்குள் இருந்த சிறுவர்களைக் கதி கலங்க வைத்த டீ-ரெக்ஸ் டைனோசரின் கர்ஜனையை மறக்க முடியுமா? 32 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்தப் படைப்பு உலகையே ஒரு கணம் நிறுத்தி, டைனோசர்களின் மீதான ஆச்சரியத்தையும் பயத்தையும் ஒருசேரப் பரிசளித்தது. அந்த ஜுராசிக் யூனிவெர்சின் ஏழாவது பாகமாக வெளியாகியிருக்கிறது இந்த `ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த்'.
17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டைனோசர் ஆராய்ச்சி கூடத்தில் குப்பையாகப் போடப்பட்ட சாக்லேட் கவரால் பெரும் விபத்து நேருகிறது. நிகழ்காலத்தில் பூமியின் சுற்றுச்சூழல், டைனோசர்களுக்கு ஒத்துவராததாக மாறிவிட்டது. இப்போது மீதமுள்ள டைனோசர்கள் வெப்பமண்டல தீவுகளில் மட்டுமே உயிர் வாழ்கின்றன. அந்தத் தீவுகளில் இருக்கும் மூன்று பிரமாண்ட உயிரினங்களின் (நிலம், கடல், வானம்) டி.என்.ஏ-வில் மனிதர்களை இதய நோயிலிருந்து காக்கும் மருந்தினைத் தயாரிக்கும் ரகசியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைப் பெறுவதற்காக, மருந்து நிறுவன அதிபர் மார்ட்டின் க்ரெப்ஸ் (ரூபர்ட் ஃப்ரெண்ட்) ஒரு ரகசியப் பயணத்தை அந்தத் தீவை நோக்கித் தொடங்குகிறார். அவருடன் முன்னாள் ராணுவ அதிகாரி ஜோரா பென்னட் (ஸ்கார்லட் ஜான்சன்), தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹென்றி லூமிஸ் (ஜானாதன் பெய்லி), கடற்பயணத்துக்கான கேப்டன் டன்கன் (மஹர்ஷலா அலி) மற்றும் அவரது உதவியாளர்கள் ஆகியோர் இணைகின்றனர். அவர்கள் செல்லும் வழியில், கடல்வாழ் டைனோசரால் தாக்கப்பட்டு படகு விபத்தில் சிக்கிய மற்றொரு குடும்பத்தையும் மீட்கிறார்கள். இதன் பின்னே கடல், நிலம், ஆகாயம் என மூன்று பகுதிகளிலும் நடக்கும் சாகசப் போராட்டமே ‘ஜுராசிக் வேர்ல்டு ரீபெர்த்’ படத்தின் கதை.
ஸ்கார்லெட் ஜோஹன்சனும், ஜொனாதன் பெய்லியும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்க முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக, ஜொனாதன் பெய்லி டைனோசர்களை முதன்முதலில் பார்க்கும்போது காட்டும் ஆச்சரியம், சாம் நீல் முதன்முதலாக டைனோசரைப் பார்க்கும் போது எழுந்த அதே பரவச நிலையை மீண்டும் மீள் பதிவிடுகிறது. மற்ற கதாபாத்திரங்களில் மஹர்ஷலா அலியின் கேப்டன் டன்கன் பாத்திரம் மட்டுமே மனதில் நிற்கும்படியான எழுத்தில் இருக்கிறது. அவரோடு மட்டுமே உணர்வுபூர்வமாக பொருந்த முடிகிறது. அதேபோல கதைக்குச் சம்பந்தம் இல்லாமல் உள்ளே வரும் குடும்பக் கதைக்களம் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. இவர்களின் கதாபாத்திரங்கள், பெரும்பாலும் வழக்கமான ‘ஜுராசிக்’ குடும்ப டெம்ப்ளேட்டைப் பின்பற்றுவதால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் படத்தில் அவர்களை வைத்து வரும் சில நகைச்சுவைகள் சிரிப்பை உண்டாக்குகின்றன.
கதையைப் பொறுத்தவரை சில மனிதர்கள் ஆபத்தான தீவுக்குச் செல்கிறார்கள், டைனோசர்களால் தாக்கப்படுகிறார்கள், உயிர் தப்ப முயற்சி செய்கிறார்கள் என ‘அதே மாவு, புது தோசை’ ஃபார்முலாதான். டைனோசர்களையே டயர்டாக்கும் இந்த ‘திரைக்கதை டெம்ப்ளேட்’ திகட்டும் நிலையை எட்டிவிட்டது சாரே! காட்சிகளை செட் செய்ய வைக்கப்பட்ட தொடக்கப் படிமங்களும் மந்தமாகச் செல்ல, புதுமை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. டேவிட் கோப்பின் திரைக்கதை, பழைய ஜுராசிக் பார்க் படத்தின் காட்சியை ரி-கிரியேட் செய்யவேண்டும் என்று வம்படியாகயே எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக அந்தக் குழந்தை கதாபாத்திரம் அதற்காக வைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.
ஆழமான கதாபாத்திர வளர்ச்சியோ, புதிய தத்துவக் கேள்விகளோ இல்லாததால் படத்தோடு பொருந்திப்போக முடியவில்லை. அதே கார்ப்பரேட் பேராசை, மரபணு ஆராய்ச்சியின் நெறிமுறைகள் போன்றவை பேசப்படுகின்றன. அதுவும் மேலோட்டமாகவே இருக்கின்றன. குறிப்பாக எந்தக் கதாபாத்திரத்தின் மரணமும் பெரிதாக நம்மை அசைத்துப் பார்க்கவில்லை. இருப்பினும் நீர், நிலம், காற்று என வரும் டைனோசர் காட்சிகளில் தொழில்நுட்ப ரீதியாக மிரட்டியிருக்கிறார்கள். இயக்குநர் காரெத் எட்வர்ட்ஸ் ஒரு பிரமாண்டமான பதற்ற சவாரியை உண்டாக்கி, முதல் ஜுராசிக் பார்க் படத்தின் ஆச்சரியத்தையும், பயத்தையும் மீட்டெடுக்க முயற்சி செய்திருக்கிறார். அதற்கேற்றவாறு கடல் மற்றும் மலைப்பகுதி சண்டைக் காட்சிகள், இருக்கை நுனியில் உட்கார வைக்கின்றன.
அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட்டின் இசை பெரிதாகப் படத்திற்கு உதவவில்லை என்றாலும், ஆங்காங்கே வருகிற ஜான் வில்லியம்ஸின் பழைய புரட்சிகரமான இசை நாஸ்டால்ஜியாவைத் தூண்டி பரவச நிலையைக் கொடுக்கிறது. படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவானாலும் கண்ணுக்கு முன்னே தெரிகின்ற ஆழமான காட்சியமைப்புகள் குறைவே. ஆனால் நீர்வீழ்ச்சி, பெருங்கடல், தீவின் இருண்மை போன்றவை நிஜமாகவே இப்படி ஓர் உலகம் இருக்கிறது போல என்ற அனுபவத்தைத் தருகின்றன. ஆனால் 1993-ல் அன்றைய T-rex நிகழ்த்திய பீதியை, இப்போது உருவாக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட D-rex கொஞ்சம்கூட நெருங்கவில்லை என்பதே உண்மை! CGI காட்சிகளும், க்ரீன் மேட் ஷாட்களுமே இன்னும் மெருகேற்றப்பட்டிருக்கலாம். ஜுராசிக் பார்க் படத்தில் முதல் முறையாக டைனோசர்களைப் பார்த்தபோது ஏற்பட்ட ‘வாவ்’ உணர்வு இங்கே மிஸ்ஸிங்!
மொத்தத்தில் பழைய ஜுராசிக் பார்க் படத்தின் மேஜிக்கை முழுமையாக மீட்டெடுக்காவிட்டாலும், பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளும், நாஸ்டால்ஜியாவைத் தூண்டும் இசையும், அதிக எதிர்பார்ப்பு இல்லாதவர்களை திருப்திப்படுத்தலாம். அதேநேரம் புதுமையான கதைக்களம், நல்ல திரைக்கதை ஆகியவற்றை எதிர்பார்ப்பவர்களுக்குச் சிறிது ஏமாற்றமே மிஞ்சுகிறது.