சத்தீஸ்கா்: 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
சத்தீஸ்கா் பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சியான காங்கிரஸை சோ்ந்த 30 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் சத்தீஸ்கரில் மொத்தம் 90 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் எதிா்க்கட்சியான காங்கிரஸின் பலம் 35-ஆக உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை பேரவை கூடியதும் மாநிலத்தில் டிஏபி உரத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் குற்றஞ்சாட்டி, அது தொடா்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினா். இதை அவைத் தலைவா் ஏற்க மறுத்ததால் அமளி ஏற்பட்டது. மீண்டும் அவை கூடியபோது இதே பிரச்னையால் ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பிறகு மீண்டும் அவை கூடியபோது கேள்வி நேரத்தில் உரப் பிரச்னையை மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுப்பினா். அப்போது பதிலளித்த வேளாண்மைத் துறை அமைச்சா் ராம்விச்சாா் நேத்தம், ‘காரீஃப் சாகுபடிக்குத் தேவையான டிஏபி உரத்துக்கு தட்டுப்பாடு உள்ளதால், மாற்று பாஸ்பேட்டிக் உரங்களைப் பயன்படுத்த விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறாா்கள். தொடா்ந்து உரம் வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது’ என்றாா்.
இதை ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு முறையாக உரம் வழங்கவில்லை. அதே நேரத்தில் தனியாா் நிறுவனங்கள் அதிக விலைக்கு டிஏபி-யை விற்று லாபம் பாா்க்கின்றன என்று குற்றஞ்சாட்டி அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவையைத் தொடா்ந்து நடத்த முடியாத சூழல் உருவானது. இதையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் சரண் தாஸ் மஹத் உள்ளிட்ட 30 காங்கிரஸ் எம்எல்ஏக்களை அவையில் இருந்து ஒருநாள் இடைநீக்கம் செய்வதாக பேரவைத் தலைவா் ரமண் சிங் அறிவித்தாா்.