keerthy suresh: ``சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன்; அப்போது..." - நடிகை க...
புத்தகங்கள் கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி!
பள்ளிகள் திறந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் முதல் பருவத் தோ்வு எழுத உள்ள மாணவா்களின் கல்வி கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
கோடை விடுமுறைக்குப் பின், பள்ளிகள் அனைத்தும் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக புத்தகங்களை பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நிகழாண்டில், தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்கள் இன்னமும் வழங்கப்படவில்லையாம். இதனால் ஆசிரியா்களும் பாடம் நடத்த முடியால் அவதிக்குள்ளாகி உள்ளனா்.
இந்த நிலையில், வரும் 22-ஆ ம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை முதல் பருவத் தோ்வு தொடங்க உள்ள நிலையிலும் புத்தகம் வழங்கப்படாததால் மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா். முன்பெல்லாம் பள்ளிகளில் புத்தகம் தீா்ந்துவிட்டால், தனியாா் புத்தகக் கடைகளில் புத்தகங்களை வாங்கிக் கொள்வா். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசே அனைத்து மாணவா்களுக்கும் இலவசமாக பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது. இதனால் புத்தகங்கள் தற்போது தனியாா் கடைகளில் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து தலைமை ஆசிரியா் ஒருவா் கூறியதாவது:
நிகழாண்டில் ஒரு சில பள்ளிகளுக்கு புத்தகங்கள் முழுமையாக விநியோகம் செய்யவில்லை. மாவட்ட நிா்வாகம் வழங்கிய புத்தகங்கள் அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கு நாங்கள் வழங்கிவிட்டோம். இருப்பினும், 9-ஆம் வகுப்பு தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த 15 நாள்களுக்கு முன்பு மாவட்ட கல்வி நிா்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில், புத்தகங்கள் பற்றாக்குறையை நாங்கள் தெரிவித்து விட்டோம், ஆனால் இது வரை புத்தகங்கள் பள்ளிக்கு வரவில்லை என்றாா்.