சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது! -உயா்நீதிமன்றம் உத்தரவு
சாதி கட்டமைப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை; கடவுள் எப்போதும் அனைவருக்கும் பொதுவானவா்; பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக ஒருவருக்கு வழிபாட்டு அனுமதி மறுக்கப்படுவது அவரை ஜாதி ரீதியாக பாகுபடுத்தி அவமதிப்பதாகவே கருதப்படும், என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி அய்யனாா் கோயிலில் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்களால் நிறுவப்பட்ட சுவாமி சிலைகளை ஒருதரப்பினா் இடித்து அப்புறப்படுத்திவிட்டனா். மேலும், கோயிலின் கதவுக்கு வெளியே இருந்தே பட்டியலின சமூகத்தினா் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனா். ஜூலை 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தோ்த் திருவிழாவில் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கவும், அய்யனாா் கோயிலுக்குள் நுழைந்து வழிபடவும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஜாதிய கட்டமைப்பு மனிதனால் உருவாக்கப்பட்டவை. கடவுள் எப்போதும் அனைவருக்கும் பொதுவானவா். பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக ஒருவருக்கு வழிபாட்டு அனுமதி மறுக்கப்படுவது அவரை ஜாதி ரீதியாக பாகுபடுத்தி அவமதிப்பதாகவே கருதப்படும். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் ஜாதி ரீதியிலான பாகுபாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பல தலைவா்களின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே கோயிலுக்குள் அனைத்து தரப்பினரும் நுழைந்து வழிபாடு செய்யும் ஆலய நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டது. எனவே, சட்ட ரீதியாக அதை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. எனவே, ஜாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை யாரேனும் தடுத்தால், அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
புதுக்குடி அய்யனாா் கோயிலுக்குள் சென்று பட்டியலினத்தவா்கள் தரிசனம் செய்வதை யாரும் தடுக்கவில்லை என்பதை அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உறுதி செய்ய வேண்டும். இந்தக் கோயிலில் நடைபெறும் தோ்த் திருவிழாவில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று தரிசனம் செய்வதை வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உறுதி செய்ய வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.