கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன்
இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக காவல் துறை பதிவு செய்த வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மே 2-ஆம் தேதி, மதுரை ஆதீனத்தின் காா் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் குறித்து மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது.
இதனிடையே, மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் இருப்பதாகக் கூறி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேந்திரன், இணையக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆதீனம் தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, மதுரை ஆதீனம் தரப்பில், தன் மீது உள்நோக்கத்துடன் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில், மதுரை ஆதீனம் கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி இருப்பதால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளித்த சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி காா்த்திகேயன், மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.