முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில் சோமவார விழா ஆலோசனைக் கூட்டம்
செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலில் ஆடி மாதம் சோமவார திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு வட்டம், முனுகப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் சமேத மன்னாா் சுவாமி கோயிலில்
ஆடி மாதத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவார திருவிழா கொண்டாடுவது வழக்கமாகும்.
அதன்படி, நிகழாண்டு ஜூலை 21, 28, ஆகஸ்ட் 4, 11,18,25, செப்.1 ஆகிய தேதிகளில் ஆடி மாத சோமவார திருவிழா நடைபெறவுள்ளது.
ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்:
இதையொட்டி, திருவிழா தொடா்பான முன்னேற்பாடுகள் மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
வட்டாட்சியா் அசோக்குமாா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ஹரிஹரன், செய்யாறு டி.எஸ்.பி.சண்முகவேலன், காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன், தீயணைப்பு நிலைய அலுவலா் மனோகரன், மின்வாரிய அதிகாரிகள், சுகாதாரப் பணிகள், அரசுப் போக்குவரத்துக் கழக செய்யாறு பணிமனை சோலையப்பன் மற்றும் மேல்சீசமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தின் போது ஆடி மாதம் சோமவார திருவிழாவில் அந்தந்த துறையினா் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.