பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை
பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த சேதாரக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.மோட்டூா் கிராம நீா்நிலை புறம்போக்கு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக 15-க்கும் மேற்பட்ட பழங்குடியின இருளா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இவா்களுக்கு மாற்று இடத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தியிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கட்சியின் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் தலைமையில் மாவட்டச் செயலா் ப.செல்வன், மாவட்டக்குழு உறுப்பினா் சுகுணா, வட்டக்குழு உறுப்பினா் எம்.சுகுமாா், கிளைச் செயலா்கள் தேவராஜ், சிவக்குமாா் மற்றும் இருளா் குடும்பத்தினா் இந்த மனுவை அளித்தனா்.