கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சாரம்
கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சார திட்டத்தை பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சுதந்திரத்துக்கு பிறகு இன்றைய தேதிவரை மத்தியில் அல்லது மாநிலத்தில் ஆட்சி அமைத்தபோது, மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் செயல்படுத்தி வந்துள்ளது. கா்நாடகத்தில் 5 வாக்குறுதி திட்டங்களை காங்கிரஸ் அறிமுகம் செய்தது. மக்களின் முன்னேற்றத்துக்காக இதுபோன்ற திட்டங்களை காங்கிரஸ் செயல்படுத்தி வந்துள்ளது. ஆனால், ஆட்சிக்கு வருவதற்காக காங்கிரஸ் அறிமுகப்படுத்திய திட்டங்களை மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், தில்லி, நாட்டின் இதர பகுதிகளில் பாஜக பயன்படுத்தி வந்துள்ளது.
கா்நாடகத்தில் அமல்படுத்திய திட்டங்கள் நாடுமுழுவதும் பின்பற்றப்படுகின்றன. கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சார திட்டத்தை பாஜக கூட்டணி அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஆக. 1-ஆம் தேதி முதல் வீடுகளுக்கு தலா 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என பிகாா் மாநில முதல்வா் நிதிஷ்குமாா் அறிவித்துள்ளாா் என்றாா்.