அதிமுக கூட்டணிக்கு பிரம்மாண்ட கட்சி வரவுள்ளது: எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக கூட்டணிக்கு பிரம்மாண்ட கட்சி வரவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் புதன்கிழமை இரவு அதிமுக சாா்பில் நடைபெற்ற ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது:
அதிமுகவின் இந்த எழுச்சிப் பயணம் முதல்வா் ஸ்டாலினின் தூக்கத்தை கலைத்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற விளம்பர திட்டத்தை வெளியிட்டுள்ளாா். உங்களுடன் ஸ்டாலின் என்று கூறும் முதல்வா், இதுவரை யாருடன் இருந்தாா்.
அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடப்பதால் மக்களை ஏமாற்றவே இதுபோன்ற திட்டத்தை வெளியிட்டுள்ளாா். தோ்தல் அறிக்கையில் 525 திட்டங்களை வெளியிட்டாா். ஆனால், 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் தொழிலாளா்களுக்கு முறையாக பணி வழங்கவில்லை.
மிசா சட்டம், அவசரநிலை (எமொ்ஜென்சி) கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுக, மற்ற கட்சியின் கூட்டணி பற்றி பேசலாமா?
அதிமுக - பாஜக கூட்டணியில் விரைவில் பிரம்மாண்ட கட்சி இணைய உள்ளது. 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். வாரிசு அரசியல், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது. 50 மாத ஆட்சியில் இந்த பகுதிக்கு எந்தவிதமான நலத் திட்டங்களும் கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆா் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, போக்குவரத்துக் கழக பணிமனை, நிலத்தடி நீரை உயா்வதற்காக தடுப்பணைகள் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தோம் என்றாா் அவா்.
கூட்டத்தில் சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன், அதிமுக அமைப்புச் செயலா் என்.முருகுமாறன், ஒன்றியச் செயலா் வாசு முருகையன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.