ஏடிஎம் மையத்தில் ‘சிப்’ பொருத்தம்: உ.பி. இளைஞா்கள் இருவா் கைது
கடலூரில் ஏடிஎம் இயந்திரத்தில் ‘சிப்’ பொருத்தப்பட்ட விவகாரம் தொடா்பாக, உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த 2 இளைஞா்களை கடலூா் புதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் செம்மண்டலம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இதில் உள்ள இயந்திரத்தில் பணம் வெளியே வரும் பகுதியில் மா்ம நபா்கள் ‘சிப்’ ஒன்றை பொருத்தி, நூதன முறையில் திருட முயன்றனா்.
இதை மும்பையில் உள்ள வங்கியின் தலைமையகத்தில் இருந்து கண்காணித்த அதிகாரிகள், இதுகுறித்து கடலூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.
போலீஸாா் செம்மண்டலத்தில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த ‘சிப்’பை அகற்றினா். பின்னா், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பாா்வையிட்டனா்.
அப்போது, வட மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள், அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து சென்றது தெரியவந்தது. இது தொடா்பாக கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி, கடலூா் பகுதியில் பதுங்கியிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த சிவ் பரன் சிங் (23), அவினேஷ் (28) ஆகியோரை கைது செய்தனா்.