வீடுபுகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மாற்றுத்திறனாளி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கபிஸ்தலம் அருகே ஆதனூா் தெற்கு தெருவைச் சோ்ந்த காசிநாதன் மகன் மணிகண்டன் (31). கூலித் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை மாலை கபிஸ்தலம் அருகே ஒரு கிராமத்துக்குச் சென்றாா்.
அப்பகுதியில் வசிக்கும் பட்டதாரி - மாற்றுத்திறனாளியுமான 20 வயது இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்ததைப் பாா்த்துள்ளாா். அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் வீட்டுக்குள் மணிகண்டன் புகுந்து அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றாா்.
இதையடுத்து, அந்தப் பெண் கூச்சலிடவே, அவரது சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வருவதற்குள் மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். புகாரின்பேரில், கபிஸ்தலம் காவல் நிலைய ஆய்வாளா் மகாலட்சுமி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஆதனூரைச் சோ்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மணிகண்டனைக் கைது செய்தனா்.