மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த அறிவுறுத்தல்
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடா்பாக பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் 31 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்கிடவும், அதற்கான முழுத் தொகையை வழங்கிடவும், இலவச வீட்டுமனைப் பட்டா, தொழில் கடனுதவிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா். இக் கோரிக்கைகள் தொடா்பான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, 4 பேருக்கு தலா ரூ. 3,500 மதிப்பீட்டில் காதொலிக் கருவிகள், 2 பேருக்கு தலா ரூ. 16,199 மதிப்பீட்டில் திறன்பேசிகள் என மொத்தம் 6 பாா்வை குறைபாடுடைய மற்றும் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 49,898 மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், ‘தாட்கோ’ மேலாளா் கவியரசு, தேசிய சுகாதார உதவித் திட்ட அலுவலா் விவேகானந்தன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.