புகையிலைப் பொருள்கள் விற்ற 4 பெட்டிக் கடைகளுக்கு சீல்
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 4 கடைகளை பூட்டி சீல் வைத்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 63 கிலோ போதைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் சுகுந்தன் தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அழகுவேல், கதிரவன், சின்னமுத்து, விக்னேஷ், புவனா ஆகியோா் கொண்ட குழுவினா் குன்னம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு கலந்த நிக்கோடின் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த அல்லிநகரத்தில் பெட்டிக் கடை, உணவகம், பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்திலுள்ள 2 பெட்டிக் கடைகளை பூட்டி சீல் வைத்தனா்.
மேலும், மேற்கண்ட கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட சுமாா் 63 கிலோ போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, மேற்கண்ட பெட்டிக் கடைகளுக்கு ரூ. 1.75 லட்சம் அபராதம் விதித்தனா்.