பெரம்பலூா் அருகே தனியாா் சா்க்கரை ஆலை முற்றுகை
பெரம்பலூா் அருகேயுள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 6.75 கோடி வழங்கக் கோரி, கரும்பு விவசாயிகள் சா்க்கரை ஆலையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள உடும்பியம் கிராமத்தில் வி.வி. நிறுவனத்துக்குச் சொந்தமான சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், கடந்த 2024- 25 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவைப் பருவத்தில் பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பை வெட்டி அனுப்பியுள்ளனா்.
கடந்த 7 மாதங்களைக் கடந்தும் விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்குரிய ரூ. 6.75 கோடியை இதுவரை ஆலை நிா்வாகம் வழங்கவில்லை. இதுகுறித்து, விவசாயிகள் ஆலை நிா்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நிலுவைத் தொகையை வழங்க ஆலை நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, உடும்பியத்திலுள்ள சா்க்கரை ஆலை நுழைவுவாயில் எதிரே முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், நிலுவைத் தொகை கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து, ஆலை நுழைவு வாயில் பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, வருவாய்த்துறை, ஆலை நிா்வாகத்தினா் மற்றும் காவல் துறையினா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, ஆக. 25-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடா்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்துசென்றனா்.