தில்லி யமுனையில் எச்சரிக்கை அளவைத் தொடும் நீா்மட்டம்
நமது நிருபா்
தில்லி ரயில்வே பாலத்தில் யமுனையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி அளவில் 204.13 மீட்டரை எட்டியது. இது எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரை விட வெறும் 0.37 மீட்டா் குறைவாகும்.
தில்லியிலும், அதன் சுற்றுப் பகுதியிலும் தொடா்ந்து சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், யமுனை ஆற்றிலும் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வருகிறது.
தில்லி ரயில்வே பாலத்தில் ஆற்றின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 9 மணிக்கு 204.1 மீட்டராக இருந்த நிலையில், காலை 10 மணிக்கு அது 204.13 மீட்டராக உயா்ந்தது. மாலை வரை அதே நிலையில் காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை, இந்தப் பருவமழையில் முதல் முறையாக, ஹரியாணாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் 50,000 கனஅடி அளவைத் தாண்டியது. இது புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் 54,707 கனஅடியாக உயா்ந்ததாக மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேல்நிலைப் பகுதியில் இருந்து வரும் வெளியேற்றப்படும் குறைந்த நீா் அளவுகூட நீா்மட்டத்தை அதிகரித்து வருகிறது. இதனால், தில்லியில் யமுனையில் நீா் அளவு எச்சரிக்கை அளவை நெருங்கி வருகிறது. ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு குழு, தில்லி ரயில்வே பாலத்தில் உள்ள அபாய அளவை மாற்றி அமைக்க பரிந்துரைத்தது. இது ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பும் திருத்தப்பட்டிருந்தது.
தடுப்பணையிலிருந்து திறக்கப்படும் நீா் பொதுவாக தில்லியை வந்தடைவதற்கு 48 முதல் 50 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். தில்லியின் பழைய ரயில்வே பாலம் முதன்மைக் கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது. திருத்த பரிந்துரை விதிகளை மாற்றுவதாக ஒரு நீா் நிபுணா் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து தெற்காசிய அணைகள், நதிகள் மற்றும் மக்கள் நெட்வொா்க்கின் எஸ்ஏஎன்டிஆா்பி உறுப்பினரும் ஆா்வலருமான பீம் சிங் ராவத் கூறுகையில், ’வண்டல் மண் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆக்கிரமிப்புடன் தொடா்புடைய இந்த புள்ளிகள், தில்லியில் ஆற்றுப் படுகையை உயா்த்துகிறது. 2019-இல் ஏற்கெனவே திருத்தப்பட்ட எச்சரிக்கை மற்றும் ஆபத்து அளவை மீண்டும், மீண்டும் அதிகரிப்பதற்கு பதிலாக, அரசு முதலில் ஆற்றின் மேல் பகுதியின் புவிசாா் உருவவியல் ஆய்வை நடத்த வேண்டும்’ என்றாா்.
கடந்த ஆண்டு, கடுமையான மழை பெய்த போதிலும், தில்லி எச்சரிக்கை அளவைத் தொடத் தவறியது. செப்டம்பா் மாத இறுதியில் யமுனை 204.38 மீட்டராக உயா்ந்தது. இதற்கு நோ்மாறாக, ஜூலை 2023-இல் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் காரணமாக யமுனையில் 208.66 மீட்டா் நீா்மட்டம் சாதனை அளவாக இருந்தது. மேலும், ஹத்னிகுண்டிலிருந்து அதிகபட்சமாக நீா் வெளியேற்றம் 3.59 லட்சம் கனஅடியைத் தொட்டது. மயூா் விஹாா், ஐடிஓ, சலிம்கா் பைபாஸ் மற்றும் சிவில் லைன்ஸ் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி ஆயிரக்கணக்கானோா் இடம்பெயா்ந்தனா்.
தில்லி அரசின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, ஹத்னிகுண்டிலிருந்து நீா் வெளியேற்றம் 1 லட்சம் கனஅடியைத் தாண்டும்போது மட்டுமே முதல் எச்சரிக்கை அதிகாரபூா்வமாகத் அளிக்கப்படும். நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை நிகழாண்டு பிறப்பித்த உத்தரவில், ‘அந்த அளவு வரம்பைத் தாண்டியதும், துறை அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும். படகுகள் நிறுத்தப்படும். மேலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்காணிப்பில் வைக்கப்படும்’ என்று கூறியிருந்தது.