கிராவல் மண் திருடிய இருவா் கைது
பெரம்பலூா் அருகே டிராக்டரில் கிராவல் மண் திருடிய 2 பேரை மங்களமேடு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் போலீஸாா் அரியலூா் - பெரம்பலூா் சாலையில், குன்னத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, 2 டிராக்டரில் கிராவல் மண் ஏற்றி வந்தவா்களை வழிமறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த ரெங்கன் மகன் செந்தில் (40), உலகநாதன் மகன் அசோகன் (40) என்பதும், அனுமதியின்றி கிராவல் மண் திருடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மேற்கண்ட இருவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களை கைது செய்து டிராக்டருடன் கிராவல் மண்ணையும் பறிமுதல் செய்தனா். பின்னா், மேற்கண்ட இருவரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.