குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு
"அதிமுக-வை பாஜக விழுங்கிய கதை" - பட்டியலிடும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருப்பதால் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்தச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் நேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, வி.சி.க-வை தி.மு.க கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும், இன்னும் கொஞ்ச நாளில் விழுங்கிவிடும் என்றும் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய விமர்சனத்துக்கு எதிர்வினையாக, `அ.தி.மு.க-வை பா.ஜ.க விழுங்கிய கதை' என எக்ஸ் தளத்தில் பட்டியலிட்டிருக்கிறார் வி.சி.க துணைப் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான ஆளூர் ஷாநவாஸ்.
அந்தப் பதிவில் ஆளூர் ஷாநவாஸ், "வி.சி.க-வை தி.மு.க விழுங்கிவிடும் என்கிறார் எடப்பாடி. விழுங்குவதும் ஏப்பம் விடுவதும் பா.ஜ.க-வின் வேலை.
முனை மழுங்குவதும் பாதாளத்தில் விழுவதும் அ.தி.மு.க-வின் நிலை. அ.தி.மு.க-வை பாஜக விழுங்கிய கதையை சொல்லவா?
1) ஜெயலலிதா அம்மையார் உடன்படாத GST, உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அவர் மறைந்த உடன் கையெழுத்துப் போட்டது அ.தி.மு.க.
2) வேளாண் சட்டம், CAA சட்டம், முத்தலாக் தடைச் சட்டம், டில்லி மாநில அரசின் அதிகாரம் பறிப்பு, காஷ்மீர் 370 பிரிவு நீக்கம் என்று பா.ஜ.க-வின் அராஜகங்களுக்கு துணை போனது அ.தி.மு.க.

3) அ.தி.மு.க பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளரான சசிகலாவை அப்பொறுப்பில் தொடர முடியாமல் செய்தது பா.ஜ.க.
4) அ.தி.மு.க எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட பின்பும் சசிகலா முதலமைச்சராக முடியாமல் போனதன் பின்னணியில் இருந்தது பா.ஜ.க.
5) சசிகலாவால் முன்னிறுத்தப்பட்ட TTV தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது பா.ஜ.க.
6) OPS-ஐ தூண்டிவிட்டு தர்மயுத்தம் நடத்தச் செய்தது பா.ஜ.க.
7) எடப்பாடி ஆட்சியை எதிர்த்து பேரவையில் வாக்களித்த OPS உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் செய்தது பா.ஜ.க.
8) அதே OPS-உடன் EPS-ஐ சேர்த்து, அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்திற்காக கவர்னர் மாளிகையை பயன்படுத்தியது பா.ஜ.க.
9) பா.ஜ.க நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அமித்ஷாவை விமான நிலையத்தில் கட்சிக் கொடியுடன் வரவேற்றது அ.தி.மு.க.

10) பா.ஜ.க அணியை விட்டு விலகி 2024 தேர்தலை சந்தித்த அ.தி.மு.க-வுடன் மீண்டும் கூட்டணி வைக்க செங்கோட்டையனை கருவியாக்கியது பா.ஜ.க. உடனே பணிந்தது அ.தி.மு.க.
11) கூட்டணிப் பேச்சுக்காக டில்லி சென்றதையே மறைத்தது அ.தி.மு.க. பல கார் மாறி வந்து அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தது கூட்டணிக்காகத் தான் என்று அன்றே போட்டுடைத்தது பா.ஜ.க.
12) சென்னை செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி அறிவிப்பை செய்தது பா.ஜ.க. எதுவும் பேச முடியாமல் வாய்மூடி இருந்தது அ.தி.மு.க.
விசிகவை திமுக விழுங்கிவிடும் என்கிறார் எடப்பாடி. விழுங்குவதும் ஏப்பம் விடுவதும் பாஜகவின் வேலை. முனை மழுங்குவதும் பாதாளத்தில் விழுவதும் அதிமுகவின் நிலை.
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) July 23, 2025
அதிமுகவை பாஜக விழுங்கிய கதையை சொல்லவா?
1) ஜெயலலிதா அம்மையார் உடன்படாத GST, உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில்… pic.twitter.com/0kIk7v6D0r
13) இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்றது பா.ஜ.க. அதில் பங்கேற்று அசிங்கப்பட்டது அ.தி.மு.க.
14) இந்து அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் நடத்துவதா என்று ஸ்கிரிப்ட் எழுதியது பா.ஜ.க. அதை வாசித்து அம்பலப்பட்டது அ.தி.மு.க.
15) கூட்டணி ஆட்சி என்று ஓங்கி உரத்துச் சொல்கிறது பா.ஜ.க. இல்லை தனித்து ஆட்சிதான் என்று பேச வேண்டிய இடத்தில் பேசாமல், பூட்டிய வீட்டின் முன் சும்மா சவுண்டு விடுகிறது அ.தி.மு.க.
அ.தி.மு.க-வை பா.ஜ.க விழுங்கி 8 ஆண்டுகள் ஆகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தின் நிலையை இனி அ.தி.மு.க எட்டவே முடியாது." என்று விமர்சித்திருக்கிறார்.