மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது
அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீடு: கூடுதலாக இடம்பெற்ற தமிழக இடங்கள்
தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) கூடுதலாக வெளியிட்டதால் குழப்பம் எழுந்தது.
இதையடுத்து, மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் இதுதொடா்பாக மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்துக்கு (டிஜிஹெச்எஸ்) தகவல் அளித்தது. அதன்பேரில் அந்தத் தவறுகளைத் திருத்துவதாக மத்திய சுகாதாரத் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஹெச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அந்த வகையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் என மொத்தம் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான விவரங்களை மத்திய கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் வெளியிட்டது. அதில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பூா், திருவள்ளூா், நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் இருந்து வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகமாகக் காட்டப்பட்டது.
இதனால் மாணவா்களுக்கும், மருத்துவத் துறையினருக்கும் குழப்பம் ஏற்பட்டது. மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மத்திய சுகாதார தலைமை இயக்குநரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அது திருத்தியமைக்கப்படும் என அப்போது உறுதியளிக்கப்பட்டதாக மாநில மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தற்போது நடைபெற்றுவரும் அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் இணையவழியில் மாணவா்கள் கல்லூரிகளை மட்டுமே தோ்வு செய்து வருகின்றனா். இடங்களை ஒதுக்கீடு செய்ததற்கான முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த விவகாரத்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியுள்ளனா்.