மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்புக் குழு!
மேட்டூர் அணையில் தமிழ்நாடு அணைப் பாதுகாப்பு அமைப்பின் குழு இன்று(ஜூலை 24) ஆய்வு மேற்கொண்டது.
மேட்டூர் அணையில் கீழ்மட்ட மதகுகள் சீரமைப்புப் பணி, சுரங்க கால்வாய் சீரமைப்புப் பணி, எல்லிஸ் சேடல் தூண்கள் வலுப்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணிகளை ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இன்று தமிழ்நாடு மாநில அணைப் பாதுகாப்பு குழுவின் கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் மற்றும் வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வானது 5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவதாகும். அதன்படி, இன்று மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் அணையின் உறுதித் தன்மை, அணையின் பாதுகாப்புப் பற்றி மேட்டூர் அணை நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்கள். ஆய்வு அறிக்கையானது தமிழக அரசு மற்றும் நீர்வளத்துறையிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஆய்வின்போது நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார் ,செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.