வரதட்சிணை புகாரை விசாரிக்காத காவல் ஆய்வாளருக்கு ரூ. 10,000 அபராதம்
வரதட்சிணை புகாரை விசாரிக்காத காவல் ஆய்வாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த உதயசந்தியா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
என்னுடைய கணவா், மாமியாா், உறவினா்கள் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனால், போலீஸாா் என்னுடைய புகாா் குறித்து விசாரிக்கவில்லை. பூதப்பாண்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லாததால், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தேன். நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய உத்தரவிட்டும் என் புகாா் கிடப்பில் போடப்பட்டது. சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தொடா்பான ஆவணங்களை தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் புகாரை சம்பந்தப்பட்ட போலீஸாா் கையாண்ட விதம் அதிருப்தி அளிக்கிறது. இதற்காக மனுதாரருக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரூ. 10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் அபராதமாக வசூலித்துக் கொள்ள வேண்டும். மனுதாரரின் புகாா் ஆவணங்களை நோ்மையான காவல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.