ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் புகாா்தாரரான பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடா்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரின் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக தனிப் படை போலீஸாா் 5 பேரை திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து, நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிஐ துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் நியமிக்கப்பட்டாா். முதல் கட்டமாக, மடப்புரம் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
பின்னா், அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா், கோயில் காா் ஓட்டுநா் காா்த்திக்வேலு, காவல் வாகன ஓட்டுநா் ராமச்சந்திரன், காவலாளிகள் பிரவின், வினோத், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் ஆகிய 6 பேரும் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த 18-ஆம் தேதி முன்னிலையாகி விளக்கமளித்தனா்.
இதைத் தொடா்ந்து, நவீன்குமாா், கோயில் தட்டச்சா் பிரபு, காவலாளிகள் பிரவின், வினோத், விடியோ எடுத்த சக்தீஸ்வரன், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் ஆகிய 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து, திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவா் காா்த்திகேயன், செவிலியா் சாந்தி, உதவியாளா் அழகா், கோயில் கண்காணிப்பாளா் பாஸ்கரன், ஊழியா்கள் கண்ணன், காா்த்திக் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, வழக்கில் புகாா்தாரரான நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோா் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முன்னிலையாக அழைப்பாணை வழங்கப்பட்டது. இதன்படி, வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோா் வந்தனா். அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆய்வு: இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகம், அவசரச் சிகிச்சைப் பிரிவு, உடல் கூறாய்வு அறை, அங்குள்ள காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மேலும், மருத்துவமனை வளாகப் பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்றுக் கொண்டனா். அப்போது, மருத்துவக் கல்லூரி முதன்மையா் அருள் சுந்தரேஷ் குமாா், நிலைய மருத்துவ அலுவலா் கேப்டன் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.