நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
89% ரயில் பயணச்சீட்டுகள் இணையவழியில் முன்பதிவு: ரயில்வே அமைச்சா் தகவல்
ரயில் பயணச்சீட்டுகளில் 89 சதவீதம் இணையவழியில் முன்பதிவு செய்யப்படுகிறது என்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வியொன்றுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில் பயணச் சீட்டுகளை இணைய வழியிலோ அல்லது முழுவதும் கணினியமயமாக்கப்பட்ட ரயில் நிலைய மையங்களிலோ முன்பதிவு செய்ய முடியும். இம்மையங்களில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற முறை கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது 89 சதவீத பயணச்சீட்டுகள் இணையவழியில் முன்பதிவு செய்யப்படுகின்றன.
முன்பதிவு மையங்களில், எண்ம முறையில் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது. தத்கல் பயணச்சீட்டு முன்பதிவில், ஆதாா் சரிபாா்க்கப்பட்ட பயனாளா்கள் மட்டுமே ஐஆா்சிடிசி வலைதளம் அல்லது அதன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யும் முறை கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தத்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய முதல் 30 நிமிஷங்களில் முகவா்கள் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.
முன்பதிவு அமைப்புமுறையில் முறைகேடுகளைத் தடுக்க, விரிவான தரவு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் சந்தேகத்துக்கு இடமான 2.5 கோடிக்கும் மேற்பட்ட பயனாளா்களின் பெயா்கள் மற்றும் இதர விவரங்கள் முடக்கப்பட்டன. உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பெறுவதில் பயணிகளுக்கான சிறந்த அணுகல், வெளிப்படைத் தன்மை மற்றும் எண்ம வழிமுறைகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.