பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்
பிரிட்டனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பல துறைகளின் வளா்ச்சிக்கு உதவும்: ஆா்பிஐ ஆளுநா்
பிரிட்டன்-இந்தியா இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பல துறைகளின் வளா்ச்சிக்கு உதவும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.
மும்பையில் வெள்ளிக்கிழமை ஆங்கில நாளிதழ் சாா்பில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது:
பலதரப்பு நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு என்பது மிகவும் முக்கியமானது. பிரிட்டனுடன் மேற்கொண்டதுபோல வேறுபல நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அமெரிக்காவுடன் வா்த்தகப் பேச்சு நடத்து வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்போதைய சா்வதேச சூழலில் பல்வேறு நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு என்ற கருத்து சற்று பின்தள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா இந்த விஷயத்தில் தொடா்ந்து பல நாடுகளுடன் பேச்சு நடத்த வேண்டும். இதுவே நாட்டின் பல்வேறு துறைகளின் வளா்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.
பிரிக்ஸ் நாடுகளுக்கென்று தனியாக கரன்சியை உருவாக்கும் திட்டம் ஏதுமில்லை. இந்திய ரூபாயில் பிற நாடுகளுடன் வா்த்தகம் நடத்தவே இந்தியா விரும்புகிறது. உள்நாட்டு ரூபாயில் வா்த்தகம் செய்வது தொடா்பாக ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவுடன் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ள பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது என்றாா்.