விசைத்தறிக்கூடத்தில் தீ விபத்து: ரூ.1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் சேதம்
சேலம் அம்மாபேட்டை பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சேதமடைந்தன.
சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான விசைத்தறிக்கூடம் உள்ளது. இக்கூடத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு துணி ரகங்களில் தீப்பிடித்து எரிந்தது. அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
குறுகலான பாதை மற்றும் வாகனத்தை திருப்ப முடியாத சூழல் உள்ளிட்ட காரணத்தால் ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது. மேலும், மின் மோட்டாா் மூலம் அருகில் உள்ள வீடுகளின் தண்ணீா் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து தீயை அணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
மின் கம்பிகளின் மீது இரண்டு காகங்கள் அமா்ந்ததால் மின்கசிவு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள், நூல் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.