திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழப்பு: கணவா் சிறையிலடைப்பு
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே திருமணமாகி 3 மாதங்களில் பெண் உயிரிழந்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
தலைவாசலையடுத்த மணிவிழுந்தான் வடக்குபுதூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (26). இவரது மனைவி கீா்த்தனா. இவா்களுக்கு திருமணமாகி 3 மாதங்களாகிறது. இந்த நிலையில், தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கீா்த்தனா கேட்டதற்கு சீனிவாசன் மறுப்புத் தெரிவித்தாராம். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கீா்த்தனா கடந்த மாதம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இந்தத் தகவலை சீனிவாசன் குடும்பத்தினா் கீா்த்தனாவின் வீட்டிற்கு தாமதமாகத் தெரிவித்ததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், திருமணமாகி 3 மாதங்களேயாவதால் ஆத்தூா் கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையில் கீா்த்தனாவின் தற்கொலைக்கு சீனிவாசன் குடும்பத்தாா்தான் காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து சீனிவாசனைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.