சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்ட அனைவா் மீதும் நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேட்டில் தொடா்புடைய அனைவரது மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமா்ப்பிக்க தமிழக சுகாதார திட்ட இயக்குநா் டாக்டா் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவினா், பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதாா் மருத்துவமனையில் விசாரணை நடத்தி முதல்கட்ட விசாரணை அறிக்கையைச் சமா்ப்பித்தனா்.
அதன்படி, 2 தனியாா் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது நடந்திருப்பது சிறுநீரக திருட்டு அல்ல. சம்பந்தப்பட்டவா்களுக்கு தெரியாமல் எடுத்தால்தான் திருட்டு. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இது திருட்டு அல்ல; முறைகேடு.
நாமக்கல் பகுதியில், 2019-இல் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராக இருந்தாா். காவல் துறை அதிகாரி ஒருவா் விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பித்தாா். அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் தொடா்ச்சியாகத்தான், தற்போது நடந்துள்ளது. இதில், தவறு கண்டறியப்பட்டு முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முழு விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட அனைவரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியாா் மருத்துவமனைகள், முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுத்தால், பொதுமக்கள், மக்கள் நல்வாழ்வு துறையில் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.