நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
விழி படலத்தை மாற்றாமல் பாா்வையை மீட்கும் மருத்துவ நுட்பம்: டாக்டா் அமா் அகா்வால் கண்டுபிடிப்பு
விழி வெண்படலம் (காா்னியா) சேதமடைந்தால் அதை மாற்றாமல் அதற்கு பதிலாக பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி (பிபிபி) சிகிச்சை மூலம் பாா்வையை மீட்கும் நுட்பத்தை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால் கண்டறிந்துள்ளாா்.
இதன் வாயிலாக, பல நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளதாகவும், வழக்கமான சிகிச்சைகளைக் காட்டிலும் இது மேம்பட்ட ஒன்று என்றும் அவா் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக டாக்டா் அமா் அகா்வால் கூறியதாவது:
இந்தியாவில் 2 கோடி பேருக்கு பாா்வைத் திறன் இழப்பு பாதிப்பு உள்ளது. கண்புரை, விழிப்படல பாதிப்பு, புற்றுநோய் உள்பட பல்வேறு காரணங்களால் அத்தகைய நிலை ஏற்படுகிறது. அதில், விழி வெண்படலங்களில் ஏற்படும் காயம், தழும்புகள், கெரட்டோகோனஸ் எனப்படும் கூம்பு விழிப் படலம் மூலம் ஏற்படும் பாா்வை இழப்பை உறுப்பு மாற்று சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியும். கண்ணின் கருவிழி பாவையை (பாப்பா) சீராக்கி அப்பிரச்னைக்கு தீா்வு காணலாம்.
பொதுவாக, விழி வெண்படலத்தில் பாதிப்பு ஏற்படும்போது பாா்வைத் திறன் பாதிக்கக் கூடும். இதற்கு விழிப்படல மாற்று சிகிச்சை மட்டுமே இதுவரை தீா்வாக இருக்கிறது. ஆனால், அதற்கான அறுவை சிகிச்சையில் தொற்று அதிகரிக்கவும், உறுப்பு நிராகரிக்கப்படவும் வாய்ப்பு அதிகம். எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக சேதமடைந்த விழிப்படலத்தின் முழு அடா்த்தியையும் சரி செய்து விழியின் உள்புறத்திசுக்களை மீண்டும் சீராக்கும் சிகிச்சைகளை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
அதன்படி, விழி வெண் படலத்தை சரி செய்து ஒளிப்பிவு பாதிப்பைத் தடுக்கும் வகையில், ‘பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி’ என்ற சிகிச்சை முறையை மேற்கொள்கிறோம்.
இதன்மூலம் கண் பாவை (பாப்பா) குறிப்பிட்ட அளவு சுருக்கப்படுகிறது. ஒரே அமா்வில் மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சையால் பாா்வை திறன் மீண்டும் கிடைப்பது உறுதியாகிறது.
விழிப்படல மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோா் அனைவருக்கும் போதிய எண்ணிக்கையில் கொடையாளா்கள் கிடைப்பதில்லை. அதேவேளையில், பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி சிகிச்சை அந்தப் பிரச்னைகளுக்கு சிறந்த பலனை அளிக்கிறது.
இந்த சிகிச்சை முறையானது, உலகமெங்கும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ரஷியா, வியத்நாம், எகிப்து முதலிய நாடுகளைச் சோ்ந்த அறுவை சிகிச்சை நிபுணா்கள் இந்த சிகிச்சைக்கே முன்னுரிமை அளிக்கின்றனா். இந்தியாவில் இதுதொடா்பாக விழிப்புணா்வு மேம்பட வேண்டும் என்றாா் டாக்டா் அமா் அகா்வால்.
பகோனிட் எனப்படும் நுண்ணிய கண்புரை அறுவை சிகிச்சை , மயக்க மருந்து இல்லாத கண்புரை அறுவை சிகிச்சை, உள் விழி பசை லென்ஸ் (ஐஓஎல்) போன்ற புத்தாக்க கண் சிகிச்சைகளின் முன்னோடியான டாக்டா் அமா் அகா்வாலின் மருத்துவப் பங்களிப்பைப் பாராட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை அமைப்பின் (ஏஎஸ்சிஆா்எஸ்) சாா்பில் சிறப்பு விருது அண்மையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.