ஆசிரியா்கள் பணி நிரவல்: விவரம் கோரும் கல்வித் துறை
கலந்தாய்வில் பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியா்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
தொடக்கக் கல்வி இயக்கக நிா்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1.8.2024 நிலவரப்படி மாணவா்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளா் நிா்ணயம் செய்யப்பட்டதில், உபரி எனக் கண்டறியப்பட்டவா்களுக்கு கடந்த ஜூலை 3-ஆம் தேதி எமிஸ் இணையதளம் மூலம் பணி நிரவல் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்று நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவையுள்ள பணியிடங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியா்களின் விவரங்களை இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்ட படிவங்களில் முழுமையாக நிறைவு செய்து தொடக்கக் கல்வி இயக்குநரகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.